வெடிகுண்டு வீசி பேராசிரியர் படுகொலை


வெடிகுண்டு வீசி பேராசிரியர் படுகொலை
x
தினத்தந்தி 27 Feb 2018 5:00 AM IST (Updated: 27 Feb 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஆள் மாறாட்டத்தால் கல்லூரி பேராசிரியர் வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். மாமனாரை குறிவைத்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்துள்ளது கொடியன்குளம் கிராமம். இது தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்ற கொடியன்குளம் குமார் (வயது 56). புதிய தமிழகம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த இவர் சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இவர் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அருகில் அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி குடியேறினார்.

இதே வீட்டில் குமாரின் மூத்த மகள் அனுசுயா தனது கணவர் செந்தில்குமார் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். எம்.இ. என்ஜினீயரிங் படித்துள்ள செந்தில்குமார் நெல்லை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கட்சி பணி தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் குமார் செய்து வந்தார். பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஒரு நிலத்தை விற்பது தொடர்பாக குமாருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து எதிர்தரப்பினர் இந்த நிலப்பிரச்சினையில் இருந்து விலகிக்கொள்ளுமாறு குமாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், குமார் அந்த நிலத்தை விற்க முயற்சிகள் மேற்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டின் பின் பகுதியில் உள்ள செடிகளுக்கு குமார் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் செந்தில்குமார், அவரது மனைவி அனுசுயா, மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.

அப்போது, வீட்டின் முன்பக்க காம்பவுண்டு சுவர் வழியாக ஏறி குதித்து ஒரு கும்பல் நுழைந்தது. அவர்கள் திடீரென்று வீட்டின் கதவு மீது ஒரு நாட்டு வெடிகுண்டை வீசினர். அந்த குண்டு வெடித்ததால் கதவு உடைந்ததுடன், திறந்து கொண்டது. பின்னர் அந்த கும்பல் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 3 பேர் மீது மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீசினர். அந்த குண்டு வெடிப்பில் இருந்து செந்தில்குமார் உள்பட 3 பேரும் உயிர் தப்பினர். ஆனால், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது தெரியாத வகையில் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் உள்ளே இருந்த 3 பேரும் நிலைகுலைந்த நிலையில் இருந்தனர்.

உடனே அந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதை கண்ட செந்தில்குமாரின் மனைவி அனுசுயா, மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தடுக்க முயற்சி செய்தனர். இதில் அனுசுயாவை அங்குள்ள சுவர் மீது அந்த கும்பல் தள்ளி விட்டது. பின்னர் அவர்கள், விஜயலட்சுமியின் கையில் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே வீட்டின் பின்புறமாக தோட்டத்தில் நின்றிருந்த குமார் நடந்த விபரீதத்தை அறிந்து கையில் கம்புடன் மர்ம கும்பலை விரட்டி உள்ளார். ஆனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து குமார் மற்றும் உறவினர்கள் சேர்ந்து செந்தில்குமாரையும், விஜயலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செந்தில்குமார் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். விஜயலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சுகுணாசிங் (சட்டம்-ஒழுங்கு), பெரோஸ்கான் அப்துல்லா (குற்றம்-போக்குவரத்து), உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, ஆள்மாறாட்டத்தில் இந்த கொலை நடந்து இருக்கிறது. நிலப்பிரச்சினையில் குமாரை கொலை செய்வதற்காக கூலிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் வெடிகுண்டுகளை வீசி அங்கிருந்த செந்தில்குமாரை, குமார் என்று கருதி கொலை செய்து விட்டனர். இந்த தாக்குதலில் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து குமாரை போலீசார் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து விசாரித்து புகார் பெற்றனர். அப்போது அவர், கே.டி.சி. நகரில் நிலப்பிரச்சினை தொடர்பாக கடந்த மாதம் ஒரு வக்கீல் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நான் விட்டுக்கொடுக்காமல் பேசினேன். இதனால் என்னை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதற்காக எனது வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த என்னுடைய மருமகனை கொலை செய்து விட்டனர். குண்டுகள் வீசப்பட்ட உடன் நான் அங்கிருந்த கம்பை எடுத்துக் கொண்டு வீட்டின் முன்பக்கமாக ஓடி வந்தேன். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் நேரடியாக 6 பேர் ஈடுபட்டனர்.

அவர்களை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன் என்றும், இந்த கும்பலில் 2 பேர் மொட்டை போட்டிருந்தனர் என்றும் கூறினார். இதுதவிர சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 2 பேருக்கு கொலை கும்பல் பற்றிய முழு விவரம் தெரியும் என்றும் போலீசாரிடம் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் மடத்துப்பட்டியை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று மதியம் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காலை நேரத்தில் வீடு புகுந்து பேராசிரியர் வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story