மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடப்பது வழக்கம்.

நேற்று குறைதீர்ப்பு முகாம் நடந்து கொண்டிருந்த போது, செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த அமீர்கான் என்பவரது மனைவி பாத்திமா (வயது 38) வந்தார். அவர் திடீரென தனது கையில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றினார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாத்திமாவிடமிருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்த தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

விசாரணையில், பாத்திமாவுக்கு சொந்தமான நிலம் செல்லூரில் உள்ளது. அந்த இடத்தை அளந்து பிரித்துக்கொடுப்பதற்காக அந்த பகுதி தலையாரியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும், அவரது இடத்தை அளந்து தரவில்லையாம்.

இது குறித்து வருவாய்த் துறை உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மனமுடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால், மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான காசோலையும், மதுரை தெற்கு தாலுகாவை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான காசோலைகளும், மதுரை மேற்கு தாலுகாவை சேர்ந்த ஒரு பயனாளிக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மக்கள் தொடர்பு அலுவலர் முகமது ரசூல் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story