காதலித்து பதிவு திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி பட்டதாரி பெண் தர்ணா


காதலித்து பதிவு திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்க கோரி பட்டதாரி பெண் தர்ணா
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்த கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீடு முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31) இவரது தங்கையின் தோழி மஞ்சுளா (24), பி.காம் பட்டதாரி. தோழியை பார்க்க அடிக்கடி மஞ்சுளா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சதீசும் மஞ்சுளாவும் அறிமுகமாகி காதலித்து வந்தனர். இதற்கிடையே இருவரும் இணைந்து ஆன்-லைன் மூலம் ரெடிமேட் ஆடைகள் விற்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர். ஆனால் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மஞ்சுளா கர்ப்பமானார்.

இதனை அறிந்த சதீஷ் அவரது கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியுள்ளார். மஞ்சுளாவும் அதன்படி செய்துள்ளார். இதில் அவருக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது காதல் திருமண விவகாரம் மஞ்சுளாவின் வீட்டிற்கு தெரியவந்தது.

இதனையடுத்து இருவீட்டாரும் பேசி 3 மாதத்தில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக முடிவு எடுத்தனர். 3 மாதங்கள் கழித்து மஞ்சுளாவின் குடும்பத்தினர் சதீஷின் பெற்றோரிடம் கேட்டபோது மேலும் 2 மாதங்கள் செல்லட்டும் என கூறி தட்டிக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மஞ்சுளாவிற்கு நேற்று முன்தினம் சதீஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா தனது குடும்பத்தினருடன் நேற்றுக்காலை சதீஷ் வீட்டிற்கு சென்றார். ஆனால் சதீஷ் குடும்பத்தினர் கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்தனர். தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அவரது வீட்டின் முன்பு மஞ்சுளா தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று இரு குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story