41 குழந்தைகளின் தொடர் கல்விக்காக ரூ.5¼ லட்சம் மாதாந்திர உதவித்தொகை கலெக்டர் வழங்கினார்


41 குழந்தைகளின் தொடர் கல்விக்காக ரூ.5¼ லட்சம் மாதாந்திர உதவித்தொகை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

41 குழந்தைகளின் தொடர் கல்விக்காக ரூ.5¼ லட்சம் மாதாந்திர உதவித்தொகைக்கான காசோலையை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தின் வரவேற்பு வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காகவும், குழந்தைகள் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும், குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையிலும் ‘சில்ரன்ஸ் பவர் ஹவுஸ்‘ தொடங்கப்பட்டது.

அதனை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு வந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர் தனித்தனியாக சந்தித்து கொஞ்சி பேசி பிஸ்கட், சாக்லெட் வழங்கினார்.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பாக வழங்கப்படும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ஆதரவற்ற, மற்றும் பெற்றோரை இழந்த, கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தில் சிரமத்துடன் கல்வி பயின்று வரும் குழந்தைகள், பள்ளியில் இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து கல்வி பயில 41 குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 200–க்கான காசோலையையும் அவர் வழங்கினார்.

மேலும் குழந்தைகள் தத்தெடுப்பு குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிரந்தரமாக மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:–


குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்து நமது மாவட்டத்தை குழந்தை நேய மாவட்டமாக உருவாக்கும் விதமாக ‘சில்ரன்ஸ் பவர் ஹவுசில்‘ குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தை பாலியல் தொந்தரவு, குழந்தை கல்வி ஆகியவை குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும். குழந்தைகள் பாதுகாப்பின் ஒருங்கிணைப்பிற்காக ‘சில்ரன்ஸ் பவர் ஹவுசில்‘ திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், நேரு யுவகேந்திரா மற்றும் சைல்டு லைன் ஆகிய துறைகளைச் சேர்ந்த 2 பணியாளர்கள் இருப்பர்.

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் ‘சில்ரன்ஸ் பவர் ஹவுஸ்‘ அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்காக ஒரு பகுதியும், ஓவியம் வரைவதற்கு ஒரு பகுதியும், கணினி மற்றும் நூலகத்திற்காக ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் குழந்தைகள் தங்களது கருத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிப்பதற்கு ஆலோசனை பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாராமரிப்பு துறையை சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story