நாகூர் தர்கா கந்தூரி விழாவில் சந்தனக் கூடு ஊர்வலம் நடந்தது


நாகூர் தர்கா கந்தூரி விழாவில் சந்தனக் கூடு ஊர்வலம் நடந்தது
x
தினத்தந்தி 27 Feb 2018 4:00 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 461-வது கந்தூரி விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் புறப்பட்டது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து சென்றன. சந்தன கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல்கடைத் தெரு, வெங்காயகடைத் தெரு, பெரிய கடைத் தெரு, சர்அகமது தெரு உள்ளிட்ட தெருக்களில் பவனி வந்தது.

பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக சந்தனகூடு நாகூர் சென்றடைந்தது. சந்தனகூடு நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்த போது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று சந்தனகூட்டை கண்டு மகிழ்ந்தனர். சந்தனகூடு ஊர்வலத்தின்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரளாக கூடி நின்று பெரிய ரதத்தின் மீது பூக்களை வீசி பிரார்த்தனை செய்தனர்.

சந்தனக்கூடு ஊர்வலம் நாகூர் மெயின்ரோட்டை வந்தடைந்ததும் அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் நாகூர் பெரிய கடைத்தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, மியான் தெரு, ரெயிலடி தெரு, நூல் கடைத்தெரு வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தனக் குடத்தை வாங்கி கூட்டில் வைத்து மினரா வடப்புறத் தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளித்தெரு சந்தன மகாலை வந்தடைந்தது.

பின்னர் நியூ பஜார் லைன் வழியாக தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சந்தன குடத்தை இறக்கியதும் கூடு மீண்டும் தர்காவின் அலங்கார வாசலை சென்றடைந்தது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் சந்தனகுடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்கா பரம்பரை கலிபா கலிபாமஸ்தான்சாகிபு துவா செய்து ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார்.

விழாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இன, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் தலைமையில் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

Next Story