சோமஸ்கந்தர் சிலையில் முறைகேடு: காஞ்சீபுரம் கோர்ட்டில் தலைமை ஸ்தபதி முத்தையா ஆஜர்


சோமஸ்கந்தர் சிலையில் முறைகேடு: காஞ்சீபுரம் கோர்ட்டில் தலைமை ஸ்தபதி முத்தையா ஆஜர்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

சோமஸ்கந்தர் சிலையில் தங்கம் முறைகேடு செய்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற தலைமை ஸ்தபதி முத்தையா, நேற்று ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜராகி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 2015-ம் ஆண்டு சோமஸ்கந்தர் உற்சவர் சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலை 5.75 கிலோ தங்கத்தால் சுவாமிமலை தலைமை ஸ்தபதி முத்தையா தலைமையில் செய்யப்பட்டது.

இந்தநிலையில் இந்த சிலையில் தங்கம் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக அண்ணாமலை என்பவர் காஞ்சீபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, இதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து தலைமை ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் முத்தையா, முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்தபதி முத்தையாவுக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன், காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றம் எண்.1-ல் ஆஜராகி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஸ்தபதி முத்தையா, நேற்று காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜராகி தனது பாஸ்பார்ட்டை நீதிபதி மீனாட்சி முன்பு சமர்ப்பித்தார். பின்னர் கோர்ட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டார். 

Next Story