தமிழகத்துக்கு கூடுதலாக 175 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்


தமிழகத்துக்கு கூடுதலாக 175 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:45 AM IST (Updated: 27 Feb 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக 175 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் ரூ.23 கோடியே 69 லட்சம் செலவில் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் சரக்கு வாகனம் நிறுத்தும் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாராஜ் நட்டர்ஜி எம்.பி, கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை கப்பல்துறை மற்றும் நீர்வளங்கள், ஆறு வளர்ச்சி, கங்கை புத்துணர்வு மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு சரக்கு வாகனம் நிறுத்தும் முனையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோதாவரி நதியில் இருந்து ஆண்டுக்கு 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இதனால் கோதாவரியை காவிரியுடன் இணைத்து, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, ராயலசீமா பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு காவிரியில் 175 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கடல் ஆதாரத்தை மேம்படுத்த சாகர்மாலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.2.5 லட்சம் செலவில் 104 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். வ.உ.சி. துறைமுகம் ஜவுளி ஏற்றுமதிக்கு ஆதாரமாக விளங்கும் என்று நம்புகிறோம்.

மேலும் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, கன்னியாகுமரி-புதுச்சேரி-சென்னை வரை கடல் வழியாக நீர்வழி போக்குவரத்து பாதை அமைக்க இணை மந்திரி பொன்.,ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பல நீர்வழிப்பாதைகளை மேம்படுத்தி, அதன்மூலம் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த முறை நான் தூத்துக்குடிக்கு வரும்போது, கடல் விமானத்தில் வந்து இறங்க சாத்தியம் இருக்கிறது என்று நம்புகிறேன். இது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும். 49 சதவீதம் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக கப்பல் போக்குவரத்து இருப்பதால், அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பகுதியில் மீன்வளத்தையும் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்காக தமிழ்நாட்டுக்கு 100 இழுவைப்படகுகள் கட்ட அனுமதித்து உள்ளோம். தமிழகத்துக்கு நேற்று முன்தினம் ரூ.45 ஆயிரம் கோடி சாலை திட்டங்களை அறிவித்து உள்ளோம். துறைமுகங்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்து நடக்கிறது. இதில் 1½ லட்சம் பேர் இறக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் இறந்து வருகின்றனர். இதனால் டிரைவர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். இது போன்ற சரக்கு வாகன முனையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விழாவில் கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 8-வது கப்பல் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அதிநவீன சரக்கு பெட்டகம் பளுதூக்கி எந்திரங்கள், 9 நகரும் பளுதூக்கிகளையும், துறைமுக தகவல் மையத்தையும் மத்திய மந்திரி நிதின்கட்கரி தொடங்கி வைத்தார்.

Next Story