மாணவியை கேலி செய்ததால் தகராறு: அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல்


மாணவியை கேலி செய்ததால் தகராறு: அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:15 AM IST (Updated: 27 Feb 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கேலி செய்ததால் ஏற்பட்ட தகராறில் அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீ சார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர் எதிரே செயல்பட்டு வருகிறது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 900 மாணவர்களும், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியின் வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தி குத்து சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அந்த மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள், 11-ம் வகுப்பு மாணவனிடம் நேற்று தகராறு செய்து அவரை தாக்கினர். இதில் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் வகுப்பறை கதவுகள், ஜன்னல்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் வந்தனர். பின்னர் அவர்களும் எதிர் தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டு, பள்ளியில் இருந்து வெளியே ஓடி வந்தும், பஸ் நிலையம் பகுதியிலும் தாக்குதல் நடத்தி தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவரது உறவினர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story