முறையான மருத்துவம் பார்த்து இருந்தால் ஜெயலலிதா இன்னும் 10 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருப்பார்


முறையான மருத்துவம் பார்த்து இருந்தால் ஜெயலலிதா இன்னும் 10 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருப்பார்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:00 AM IST (Updated: 27 Feb 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முறையான மருத்துவம் பார்த்து இருந்தால், அவர் இன்னும் 10 ஆண்டுகள் முதல்-அமைச்சராக பணியாற்றி இருப்பார் என்று நாமக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

நாமக்கல்,

நாமக்கல் பூங்கா சாலையில் நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு எப்படி மீட்கப்பட்டதோ, அதேபோல் தற்போதும் மீட்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாற்றிலேயே இழந்த சின்னத்தை மீட்ட இயக்கம் என்ற பெருமையை அ.தி.மு.க. பெற்று உள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியால் கூட இழந்த சின்னத்தை பெற முடியவில்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ சோதனைகள் வந்தபோதும் கூட, ஒரு உறுப்பினரும் மாற்று கட்சிக்கு போகவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை கைப்பற்ற மன்னார்குடி கும்பல் சதி செய்து வருகிறது. ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் சொல்லி வருகிறார்கள்.

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓராண்டு நிறைவு செய்து உள்ளோம். 1½ கோடி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியும், ஆட்சியும் எங்கள் பக்கம் வரும் என பொய்யான தகவலை சொல்லி ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முறையான மருத்துவம் பார்த்து இருந்தால், அவர் இன்னும் 10 ஆண்டுகள் முதல்-அமைச்சராக பணியாற்றி இருப்பார். சமீபத்தில் சசிகலாவின் கணவர் நடராஜன் பாதிக்கப்பட்டபோது, ராஜ வைத்தியம் பார்த்தார்கள். அதுபோல வைத்தியம் பார்த்து இருந்தால் ஜெயலலிதா இன்னும் 10 ஆண்டுகள் மக்களுக்கு பணியாற்றி இருப்பார்.

ஆனால் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டும் என சொல்லி, ஜெயலலிதா மறைவுக்கு காரணமாய் இருந்தவர்கள், தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்ற நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்களை ஏமாற்றி 20 ரூபாய் நோட்டுகளை டோக்கனாக கொடுத்து வெற்றி பெற்று விட்டனர். தமிழக மக்கள் ஒன்றும், ஆர்.நகர் தொகுதி மக்கள் அல்ல. 20 ரூபாய் நோட்டு டோக்கனை பெற்று கொண்டு உங்களை முதல்-அமைச்சர் ஆக்க, தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இரட்டை இலை சின்னம் மகத்தான வெற்றி பெறும். இந்த இயக்கத்தை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலைய வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக போகும். ஜெயலலிதாவால் விலக்கி வைக்கப்பட்டவர்கள் தான் இப்போது இந்த ஆட்சி போக வேண்டும் என நினைக்கின்றனர். இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பவர்களிடம் இருந்து காப்பாற்ற 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வீட்டிற்குள் இருந்தே முதல்-அமைச்சர் பதவியை அடைய சதி செய்தது தெரியவந்ததால், 10 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி வைத்தார்.

அவருடன் சில கட்சிக்காரர்கள் துணை போய் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான விசுவாசிகளாக என்பதை நினைத்து பார்க்க வேண்டும். எங்களை போன்ற சாதாரண தொண்டர்களுக்கு பதவி கொடுத்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 33 ஆண்டுகள் உடன் இருந்தவர்களுக்கு ஏன் கட்சியிலோ அல்லது அரசிலோ பதவி கொடுக்கவில்லை என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இவர்களின் சதி திட்டம் தெரிந்ததால் தான் பதவி கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அமைப்பு செயலாளர் சேவல் ராஜூ, நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், கரையாம்புதூர் மகேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story