மூதாட்டி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு


மூதாட்டி வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:00 AM IST (Updated: 27 Feb 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே மூதாட்டி வீட்டில் 15 பவுன் நகை-பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார்தேடி வருகின்றனர்.

ஜீயபுரம்,

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி வனஜா (வயது 65). இவர் கணவரை பிரிந்து தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். வனஜாவின் மகன் ரமேஷ் கண்ணன். இவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி வனஜா வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்ப்பதற்காக மும்பை சென்றார். இதனையடுத்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்திருந்தது.

அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.22 ஆயிரம், வெள்ளி குத்து விளக்கு, கொலுசு உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. வனஜா பீரோவை பூட்டிவிட்டு, அதன் சாவியை ஒரு ஆணியில் தொங்கவிட்டு செல்வது வழக்கம். மும்பை சென்றபோதும், சாவியை அவ்வாறு தொங்கவிட்டு சென்றுள்ளார். கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை, பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வனஜா ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நகை -பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story