திருச்சி கலெக்டர் அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு மனு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு மனு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

அனைத்திந்திய அரவாணிகள் உரிமைகள் மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் அதன் தலைவர் மோகனா தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் நின்ற போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். கூட்டமாக செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை என்றதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருநங்கைகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்கள் அமைப்பு 2002-ம் ஆண்டு முதல் திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திருநங்கைகளுக்கான அரசின் நலத்திட்டங்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் பயன்பெறவில்லை. வயதான திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை ஓராண்டாக வழங்கப்படவில்லை. 500-க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் 50-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் அதிக அளவில் வசிப்பதால் அவர்களுக்கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும். படித்த திருநங்கைகளுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

Next Story