மனநலம் பாதித்த நபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


மனநலம் பாதித்த நபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மனநலம் பாதித்த நபர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உதவும் உள்ளங்கள் சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலம் பகுதியில் புரியாத மொழியில் பேசி கொண்டு, அழுக்கான ஆடைகளோடு சுற்றித்திரிந்த 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டு, மனநல சான்று பெறப்பட்டு இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மறுவாழ்வு இல்லத்தில் அந்த நபருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவி மற்றும் பராமரிப்பு காரணமாக ஓரளவிற்கு நினைவு திரும்பியது.

அதைத்தொடர்ந்து இல்ல நிர்வாகிகளிடம் அவர் கூறுகையில், நான் அரக்கோணம் தாலுகா நெமிலி ஒன்றியம் மேல்களத்தூரை அடுத்த செல்வமந்தை கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் - சம்பூர்ணம் தம்பதியினரின் 2-வது மகன் பொன்னுரங்கம் என்றார்.

மேலும் பொன்னுரங்கத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த 25 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். பெற்றோர் இறந்த பிறகு மூத்த சகோதரர் நாகராஜ் பொன்னுரங்கத்தை பாதுகாத்து வந்தார். வீட்டிலிருந்து அடிக்கடி பொன்னுரங்கம் காணாமல் போவதும், மீண்டும் வீட்டிற்கு வருவதும் வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்கு செல்லும் போது, பஸ்சில் இருந்து பொன்னுரங்கம் மாயமாகிவிட்டார் என தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து இல்ல நிர்வாகிகள் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை எடுத்த முயற்சியின் அடிப்படையில், பொன்னுரங்கத்தின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, அவருடைய அண்ணன் நாகராஜ், அண்ணி சாந்திக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் அவர்கள் திருப்பத்தூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்துக்கு வந்தனர். அங்கு தனது தம்பியை பார்த்த நாகராஜ் கூறுகையில், ‘தம்பி காணாமல் போனது குறித்து காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தேடி பார்த்தோம், எந்த தகவலும் கிடைக்கவில்லை, மிகவும் பாதிப்படைந்த நாங்கள் ஒரு கட்டத்தில் அவன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என நினைத்து நம்பிக்கை இழந்துவிட்டோம், இந்த நிலையில் போலீசார் மூலம் வந்த செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, எங்களின் வேண்டுதல் நிறைவேறியுள்ளது. இது கடவுள் செயல். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவனை சொந்த ஊருக்கு அழைத்து செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என கண்ணீர் மல்க கூறினார்.

பின்னர் இல்ல நிர்வாகிகள் பொன்னுரங்கத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுத்து, அறிவுரை வழங்கி அண்ணன், அண்ணியுடன் வழியனுப்பி வைத்தனர்.

Next Story