சிகிச்சை கிடைக்காததால் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியான பரிதாபம்


சிகிச்சை கிடைக்காததால் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:30 AM IST (Updated: 28 Feb 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததாலும், ஆம்புலன்சு இல்லாததாலும் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்கு வந்த வாலிபர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆஸ்பத்திரியை சூறையாடினர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 32). இவருடைய உறவினர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவீசநல்லூர் பகுதியை சேர்ந்த சிங்கு(25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பாபநாசம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் அமைந்துள்ள பகுதி அருகே இருவரும் வந்தபோது கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அதிவேகமாக வந்த ஒரு லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து நடந்தவுடன் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. செவிலியர்கள் மட்டும் 2 பேர் இருந்தனர்.

அவர்கள் காயமடைந்த இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக தெரிகிறது.

அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களும் பணியில் இல்லை. ஆம்புலன்ஸ்சும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த சிலர் ஆஸ்பத்திரியை சூறையாடினர். ஆஸ்பத்திரியில் இருந்த கண்ணாடியை உடைத்தும், நாற்காலிகளை கீழே தள்ளி விட்டும் பொருட்களை சூறையாடினர்.

பின்னர் காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இருவரையும் தனியார் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். சிங்குக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் ஆகியோர் சூறையாடப்பட்ட ஆஸ்பத்திரியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் முருகேசன், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான விஜயகுமாருக்கு சத்தியகாலா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியில் இல்லாததாலும், ஆம்புலன்சு இல்லாததாலும் ஆஸ்பத்திரி சூறையாடப்பட்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story