சிறுபான்மையின மாணவர்களின் உதவித்தொகைக்கு தேசிய கல்வி இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்


சிறுபான்மையின மாணவர்களின் உதவித்தொகைக்கு தேசிய கல்வி இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Feb 2018 2:15 AM IST (Updated: 28 Feb 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

உதவித்தொகை

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12–ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ., ஐ.டி.சி., பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு, ஆகியவற்றை படிக்கும்

கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, ஜைன் மற்றும் பார்சி மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு பள்ளி படிப்பு, மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இணையதளத்தில் பதிவு

இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் பதிவு செய்து உள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு (யூசர்– ஐ.டி.) பெறப்பட்டு உள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கல்லூரிக்கான பிரத்யேக எண் (AISHE), பள்ளிக்கான பிரத்யேக எண் (UDISE) மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அந்த விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுக வேண்டும்.

கடைசி நாள்

கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி வருகிற 31–ந்தேதி ஆகும். அன்று வரை இணையதளத்தில் பதிவு செய்த கல்வி நிலையங்கள் மட்டுமே 2018–19–ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற முடியும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story