கார் கவிழ்ந்து பா.ஜ.க. பிரமுகர் உள்பட 5 பேர் படுகாயம்


கார் கவிழ்ந்து பா.ஜ.க. பிரமுகர் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:00 AM IST (Updated: 28 Feb 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து பா.ஜ.க. பிரமுகர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து பா.ஜ.க. பிரமுகர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பா.ஜ.க. பிரமுகர்


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா சக்கம்மாள்புரம் மேல தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 48). இவர், பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளராக உள்ளார். இவருடைய மகன் கருணாகரன் (26). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே அவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலையில் சுந்தரமூர்த்தி தன்னுடைய மகனை சிகிச்சைக்காக வீட்டில் இருந்து காரில் கோவில்பட்டிக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்களுடன் கருணாகரனின் மனைவி சுபாஷினி (23), உறவினர்களான சக்கம்மாள்புரத்தை சேர்ந்த வசந்தகுமார் மனைவி சுஜாதா (24), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சுப்பையா மனைவி வீரலட்சுமி (45) ஆகியோரும் காரில் சென்றனர். சுந்தரமூர்த்தி காரை ஓட்டிச் சென்றார்.

கார் கவிழ்ந்தது


கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபயக்குரல் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி, கருணாகரன் உள்ளிட்ட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை

பின்னர் சுந்தரமூர்த்தியை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியிலும், கருணாகரனை கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காயம் அடைந்த சுபாஷினி, சுஜாதா, வீரலட்சுமி ஆகிய 3 பேருக்கும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story