குன்றத்தூர் அருகே ‘லிப்ட்’ கேட்பது போல நடித்து வக்கீலிடம் நகை, பணம் பறிப்பு


குன்றத்தூர் அருகே ‘லிப்ட்’ கேட்பது போல நடித்து வக்கீலிடம் நகை, பணம் பறிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2018 3:00 AM IST (Updated: 28 Feb 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே லிப்ட் கேட்பது போல நடித்து வக்கீலிடம் நகை, பணம் பறிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

மேற்கு தாம்பரம், சி.டி.ஓ.காலனியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 34). தாம்பரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்றவர் அங்கு பணிகளை முடித்துக்கொண்டு இரவு வீட்டுக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

மதுரவாயல் தாம்பரம் செல்லும் பைபாஸ் சாலையில் குன்றத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரத்தில் ஒரு சிறுவன் லிப்ட் கேட்டபடி கையை காட்டினான்.

இரவு நேரம் என்பதால் இரக்கப்பட்டு மொபட்டை சிவசுப்பிரமணியன் நிறுத்தினார். சிறிது நேரத்தில் அவரை சுற்றி 10-க்கும் மேற்பட்ட 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் ஒன்று திரண்டு கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் உள்ள பொருட்களை எல்லாம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.

இதனால் பயந்து போன சிவசுப்பிரமணியன் செய்வது அறியாமல் தவித்தார். அவரிடம் இருந்த 3 பவுன் நகை, 2 செல்போன்கள், 1 மடிக்கணினி, ரூ.1000 போன்றவற்றை பறித்துக்கொண்டு அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து குன்றத்தூர் போலீசில் சிவசுப்பிரமணியன் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story