முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் அரியலூர் அணி முதலிடம்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் அரியலூர் அணி முதலிடம்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான முதல்-அமைச்சர் ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் அரியலூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி களுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நட ராஜன், வளர்மதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

திருச்சி,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டி திருச்சியில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள ஆக்கி மைதானத்தில் கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. திருச்சி, நெல்லை, தஞ்சை, சேலம், அரியலூர், மதுரை, சென்னை உள்பட 32 மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 32 அணிகளும் என 64 அணிகள் பங்கேற்று விளையாடின.

நேற்று நடந்த இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் அரியலூர் மாவட்ட அணி, மதுரை மாவட்ட அணியை வென்று முதலிடத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்ட அணி, சேலம் மாவட்ட அணியை வென்று முதலிடம் பிடித்தது. 3-ம் இடத்தை ஆண்கள் பிரிவில் திருச்சி மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் திருவண்ணாமலை மாவட்ட அணியும் பிடித்தன.

அமைச்சர்கள் பரிசுகள் வழங்கினர்

பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு ஆண்கள், பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பைகளை வழங்கினர். மேலும் முதலிடம் பிடித்த அணியின் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

2-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரத்திற்கான காசோலையும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ரத்னவேல் எம்.பி. மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகர், திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 3-வது ஆண்டாக பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்ட அணி முதலிடம் பிடித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story