சிறுவாணியில் இருந்து கேரளாவுக்கு திருப்பிவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்


சிறுவாணியில் இருந்து கேரளாவுக்கு திருப்பிவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:45 AM IST (Updated: 28 Feb 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாணி அணையில் இருந்து, கேரளாவுக்கு திருப்பிவிடப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் கோவைக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை,

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் இருந்து நகருக்கு தினமும் 7½ கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணியில் தற்போது 36 அடிக்கு தண்ணீர் உள்ளது.

ஆழியாறு அணையில் கேரளாவுக்கு தண்ணீரை திறக்க வலியுறுத்தி, சிறுவாணி அணையின் மதகுகளை திறந்து கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசர வழியாக தண்ணீரை திறந்துவிட்டனர். இதனால் வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வீணாக வெளியேறியது. கடந்த 22-ந்தேதி முதல் 25-ந்தேதி மதியம்வரை நகருக்கு 9 நாட்களுக்கு தேவையான தண்ணீரை கேரளா பகுதிக்கு திறந்துவிட்டனர். இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உருவானது. இதைத்தொடர்ந்து கேரள-தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தண்ணீரை நிறுத்த கேரள அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் மதகுகளை முழுவதுமாக மூட முடியாததால், நேற்று முன்தினம் வரை தண்ணீர் வெளியேறியபடி இருந்தது.

இந்த நிலையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர்கள் நேற்றும் சிறுவாணி அணைக்கு சென்று பார்வையிட்டு, தண்ணீர் வெளியேறுவதை கேரள அதிகாரிகளிடம் சுட்டி காண்பித்தனர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் நேற்று மதியம் மதகுகள் முழுவதும் மூடப்பட்டது. தண்ணீர் கேரள பகுதிக்கு வெளியேறுவது நிறுத்தப்பட்டது. வழக்கம்போல் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் மட்டும் ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வெளியேறுகிறது.

வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டதால் கோவைக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்றும், வழக்கம்போல் நகருக்கு தினமும் 7½ கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story