தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் ஓகா, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல் வழியாக இயக்கம்


தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் ஓகா, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாமக்கல் வழியாக இயக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:15 AM IST (Updated: 28 Feb 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு வழியாக சேலம் செல்லும் ரெயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை,

தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு சில ரெயில்கள் கரூர், ஈரோடு, சேலம் வழியாக செல்கின்றன. இந்த ரெயில் போக்குவரத்தில் தெற்கு ரெயில்வே மாற்றம் செய்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட ரெயில்கள் கரூரில் இருந்து ஈரோடு செல்லாமல் நாமக்கல் வழியாக சேலம் செல்கின்றன.

இதையடுத்து, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந் தேதி முதல் இந்த பாதையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி மற்றும் நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல, ராமேசுவரத்தில் இருந்து குஜராத் மாநிலம் ஓகா வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற 6-ந் தேதி முதல் ஈரோடு செல்லாமல் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்கிறது. இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. திண்டுக்கல்லுக்கு நள்ளிரவு 2.10 மணிக்கும், கரூருக்கு நள்ளிரவு 3.20 மணிக்கும், நாமக்கல்லுக்கு அதிகாலை 4.10 மணிக்கும், சேலத்துக்கு காலை 5.40 மணிக்கும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் ஓகாவில் இருந்து ராமேசுவரம் புறப்படும் ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு காலை 8.15 மணிக்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 9.40 மணிக்கும், சேலத்துக்கு காலை 11.30 மணிக்கும், நாமக்கல்லுக்கு மதியம் 12.25க்கும், கரூருக்கு மதியம் 1 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு மதியம் 2.20 மணிக்கும், மதுரைக்கு மாலை 3.30 மணிக்கும், மானாமதுரைக்கு மாலை 4.30 மணிக்கும், பரமக்குடிக்கு மாலை 4.55 மணிக்கும், ராமநாதபுரத்துக்கு மாலை 5.20 மணிக்கும், மண்டபத்துக்கு மாலை 6 மணிக்கும் வந்து ராமேசுவரத்துக்கு இரவு 7.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story