அகல பாதை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்: காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே நாளை சோதனை ரெயில் ஓட்டம்


அகல பாதை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்: காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே நாளை சோதனை ரெயில் ஓட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:15 AM IST (Updated: 28 Feb 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் அகலப்பாதை பணிகளை ஆய்வு செய்த தென்மண்டல ரெயில்வே அதிகாரிகள், அப்பாதையில் நாளை சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றனர்.

காரைக்குடி,

காரைக்குடி- பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-அகத்தியம்பள்ளி இடையே 187 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான 73 கி.மீ. அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான பாதையில் உள்ள கண்டனூர், புதுவயல், பெரியகோட்டை, வாழ்ரமாணிக்கம், அறத்தாங்கி, ஆயக்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை வரையிலான ரெயில் நிலையங்களிலும் எஞ்சிய பணிகள் முடிவடைந்துவிட்டன.

பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதைக்கான ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக காரைக்குடி ரெயில் நிலையத்தில் இதற்கான பூஜை போடப்பட்டது. இதனையடுத்து தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன், திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு 5 டிராலிகளில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த குழுவினர் ரெயில் பாதை, பாலங்கள், சிக்னல்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

3 நாட்கள் நடத்தப்பட உள்ள ஆய்வு பணியில் முதல் நாளான நேற்று காரைக்குடியில் இருந்து ஆயக்குடி வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மீதமுள்ள பகுதிகள் இன்று ஆய்வு செய்யப்பட உள்ளன.

மேலும் நாளை(வியாழக்கிழமை) இப்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக காரைக்குடி ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் நிருபர்களிடம் கூறும்போது, “காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான வழித்தடத்தில் 255 சிறிய பாலங்கள், 14 பெரிய பாலங்கள் உள்ளன. நாளை நடைபெற உள்ள சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக முடிந்தவுடன், அதுகுறித்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் ரெயில் போக்குவரத்து தொடங்கும் தேதியை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். அநேகமாக மார்ச் மாதத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. இப்பாதையில் தினமும் 2 ரெயில்களை இயக்கவும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.

Next Story