வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களால் பொதுமக்கள் அவதி


வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 28 Feb 2018 3:15 AM IST (Updated: 28 Feb 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி சுற்று வட்டாரத்தில் இயக்கப்படும் பல வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி மத்திகிரி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி செல்லக்கூடிய வாகனங்கள், கெலமங்கலம் இயக்கப்படும் வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. மேலும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லில் இருந்து பூனப்பள்ளி வழியாக வரக்கூடிய வாகனங்கள் மத்திகிரி வழியாக ஓசூர் செல்கின்றன.

இதனால் 24 மணி நேரமும் மத்திகிரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழியாக இயக்கப்பட கூடிய பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பலவற்றில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சாலையோரமாக நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

கெலமங்கலம் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மத்திகிரி கூட்டு ரோடு அருகில் செல்லும் போது மிகவும் அதிக ஒலியை எழுப்பியபடி செல்கிறார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் இதை கண்காணித்து அதிக ஒலி எழுப்ப கூடிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story