ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான 55 ஆண்டுகள் பழமையான விவேகானந்தர் தங்கும் விடுதியை இடிக்க முடிவு


ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான 55 ஆண்டுகள் பழமையான விவேகானந்தர் தங்கும் விடுதியை இடிக்க முடிவு
x
தினத்தந்தி 28 Feb 2018 3:45 AM IST (Updated: 28 Feb 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான 55 ஆண்டுகளை கடந்த பழமையான விவேகானந்தர் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலின் கிழக்கு வாசல் எதிரில் கோவிலுக்கு சொந்தமான விவேகானந்தர் தங்கும் விடுதி கட்டிடம் அமைந்துள்ளது. 18 அறைகளுடன் உள்ள இந்த கட்டிடம், கடந்த 1963-ம் ஆண்டு கட்டப்பட்டு, 55 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதாலும், கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையிலும் காட்சியளித்து வருகிறது.

இந்தநிலையில் இந்த தங்கும் விடுதி கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை செய்து தர திருக்கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி கூறியதாவது:- கோவிலுக்கு சொந்தமான விவேகானந்தர் தங்கும் விடுதி கட்டிடம் 55 ஆண்டுகள் கடந்து விட்டது. பாதுகாப்பு கருதி இந்த கட்டிடத்தை இடிக்க இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டு, அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. விடுதி கட்டிடம் இடிக்கப்பட்டு அகற்றப்பட்ட பின்பு அதே இடத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் பயணிகளின் உடைமைகள் வைக்கம் லாக்கர் அறைகள், பாத்ரூம், கழிப்பறை வசதி கட்டிடங்கள், காலணிகள் வைப்பதற்கான அறை ஆகியவை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல ஜே.ஜே.நகரில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்னும் கூடுதலாக பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக ரூ.5 கோடி நிதியில் மேலும் விரிவாக்கம் செய்யவும், வணிக வளாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோதண்டராமர் கோவிலை சுற்றிலும் ரூ.2½ கோடி மதிப்பில் தடுப்பு சுவர் கட்டுவதோடு, வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலான திட்டம் மத்திய அரசின் ராமாயணா சர்க்யூட் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும் என்று இந்து அறநிலையத் துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்ட பின்பு இந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்படும்.அதற்கு முன்பாக விரைவில் விவேகானந்தர் தங்கும் விடுதி கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது கோவிலின் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உடனிருந்தார். 

Next Story