ஜெயலலிதா உடலை ‘பாக்கெட் பால்’ ஊற்றி அடக்கம் செய்தார்கள்


ஜெயலலிதா உடலை ‘பாக்கெட் பால்’ ஊற்றி அடக்கம் செய்தார்கள்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:00 AM IST (Updated: 28 Feb 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவும், அவருடைய உறவினர்களும் ஜெயலலிதாவின் உடலை ‘பாக்கெட் பால்‘ ஊற்றி அடக்கம் செய்தார்கள் என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், நடிகை பபிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டனர். எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் இழுக்கும் வேலையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் அ.தி.மு.க ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. ஜெயலலிதாவிற்கு வைக்கப்பட்டுள்ள சிலையை டி.டி.வி.தினகரன் விமர்சிக்கிறார். நாங்கள் விசுவாசிகள் என்பதால் சிலை வைத்துள்ளோம். அவர்கள் இதுவரை எங்கேயாவது சிலை வைத்தார்களா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது எங்கள் யாரையும் பார்க்க விடவில்லை. மத்திய நிதிமந்திரி, கவர்னர், பா.ஜ.க. தலைவர், பிறமாநில முதல்-மந்திரிகள் என யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அமெரிக்கா அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று நாங்கள் கூறியபோது அவர்கள் விடாப்பிடியாக இங்கேயே சிகிச்சை அளித்தனர். அதனாலேயே ஜெயலலிதா நம்மிடமிருந்து பிரிந்து விட்டார். ஜெயலலிதாவின் உடலை ‘பாக்கெட் பால்‘ ஊற்றி சசிகலாவும், அவருடைய உறவினர்களும் அடக்கம் செய்தார்கள். ஜெயலலிதாவை சிகிச்சையின்போது அவர்கள் எப்படி நடத்தியிருப்பார்கள் என்பதை இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story