2018-2019-ம் ஆண்டுக்கான மைசூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்


2018-2019-ம் ஆண்டுக்கான மைசூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

2018-2019-ம் ஆண்டுக்கான மைசூரு மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மைசூரு,

2018-2019-ம் ஆண்டுக்கான மைசூரு மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மைசூருவில் பூங்காக்களை மேம்படுத்தவும், மரக்கன்றுகளை நடவும் ரூ.210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல்


மைசூரு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பாக்கியவதி தலைமை தாங்கினார். துணை மேயர் இந்திரா, மாநகராட்சி கவுன்சிலர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவர் அஸ்வினி 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநகராட்சிக்கு வருமானம்

*2018-2019-ம் ஆண்டில் சொத்து வரி, பட்டா பத்திரம் மாற்றுதல் கட்டணம், பட்டா பத்திரங்களை செய்து தருவதற்கான கட்டணம் உள்பட வருவாய் துறையில் இருந்து ரூ.12.72 கோடி மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*நீர் வரி கட்டணம் ரூ.50 கோடி.

*சாக்கடை கால்வாய் மேலாண்மை கட்டணம் ரூ.150 கோடி.

*குடிநீர் வினியோகம் மற்றும் இதர வரிகள் மூலம் ரூ.8.50 கோடி.

*தொழில் செய்பவர்கள் உரிமம் புதுப்பித்தல் மூலம் ரூ.5 கோடி வருமானம்.

*மாநகராட்சி சொத்துகள் மூலம் வரும் வாடகை ரூ.371.77 கோடி.

*மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.55 கோடி.

*14-வது நிதி ஆணையத்தின் ஊக்கத்தொகை ரூ.42.10 கோடி.

*முதல்-மந்திரியின் நகர வளர்ச்சி ஊக்கத்தொகை ரூ.110 கோடி.

செலவினங்கள்

*ரூ.2 கோடி செலவில் மாநகராட்சிக்கு விளையாட்டு மைதானம் கட்டுவது.

*ரூ.1 கோடி செலவில் மகளிருக்கான மேம்பாட்டு அரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

*மைசூருவில் 2 இடங்களில் நீச்சல் குளங்கள் அமைக்க ரூ.2 கோடி.

*மகாராணி கல்லூரி சர்க்கிள் பகுதியில் இரும்பு மேம்பாலம் அமைத்தல், துப்புரவு தொழிலாளர்களுக்கு குளியல் அறைகள் மற்றும் கழிவறைகள் ஆகியவை 14-வது ஊக்கத்தொகையில் உருவாக்கும் நோக்கம் உள்ளது.

*போக்குவரத்து சுகாதாரத்திற்காக முதல்-மந்திரியின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.10 கோடி ஒதுக்கீடு.

*விளையாட்டு மைதானங்கள் மேம்பாட்டிற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு.

*பூங்காக்களை மேம்படுத்தவும், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவும் ரூ.210 கோடி.

மைசூரு மாநகராட்சி தினம்

*மைசூரு மாநகராட்சி தொடங்கி 155 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், மாநகராட்சி தினம் கொண்டாடவும், நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் ஜெயந்தியை கொண்டாடவும் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.

*துப்புரவு தொழிலாளர்களின் காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு.

*மயானங்களை மேம்படுத்தவும், எஸ்.டி., எஸ்.சி. மக்களின் நலனுக்காகவும் ரூ.25.30 கோடி ஒதுக்கீடு.

*மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.2.35 கோடி ஒதுக்கீடு.

போலீஸ் பாதுகாப்பு

இதுமட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு துறைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story