வேடசந்தூர் அருகே குடகனாற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்


வேடசந்தூர் அருகே குடகனாற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே குடகனாற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே பூதிப்புரம், அழகாபுரி, கூம்பூர் ஆகிய இடங்களில் குடகனாற்று கரையோரத்தில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இரவு, பகலாக லாரிகளில் மணல் அள்ளி வருகின்றனர். குடகனாற்றில் அள்ளப்பட்ட மணல் வேடசந்தூரில் ஆற்றங்கரையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் சுரங்கம் போல பல அடி ஆழத்தில் மணல் அள்ளப்படுவதால், மண் சரிந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. நாளுக்கு நாள் மணல் அள்ளுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது குடகனாற்றில், சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரை மின்மோட்டார் பொருத்தி உறிஞ்சி வெளியேற்றி விட்டு, மணல் அள்ளுகின்றனர். ஆற்றில் உள்ள பாறைகள் தெரியும் அளவுக்கு மணல் அள்ளப்பட்டு வருகிறது. சில சமயத்தில், பட்டப்பகலில் வாகனங்களில் சென்று மணல் அள்ளி வருகின்றனர்.

இதனை வருவாய்த்துறையினரும், போலீசாரும் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக புகார் செய்த விவசாயிகளும், மணல் அள்ளும் கும்பலால் மிரட்டப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, குடகனாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story