ஸ்மார்ட்போனில் மூழ்கும் இந்தியர்கள்


ஸ்மார்ட்போனில் மூழ்கும் இந்தியர்கள்
x
தினத்தந்தி 28 Feb 2018 11:42 AM IST (Updated: 28 Feb 2018 11:42 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட்போன்கள் பிறப்புக்கு பிறகு செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உச்சம் தொட்டுவிட்டது.

நம்மில் பலரும் நகமும், சதையுமாய் ஸ்மார்ட்போன்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு இருக்கிறார்கள். எளிதில் யாரையும் தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதாலும், விரும்பும் தகவல்களையெல்லாம் பெறமுடிவதாலும், உள்ளங்கையில் உலகத்தை உற்றுநோக்க முடிவதாலும் மனிதர்களிடம் உயரிய இடத்தை ஸ்மார்ட்போன்கள் பிடித்துவிட்டன. இவற்றால் நன்மைகள் பல விளைந்தாலும், தீமைகளும் ஏராளம் தீண்டிப் பார்க்கின்றன.

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ‘ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரில் கணிசமானோர் நண்பர்களைவிடவும், உறவுகளைவிடவும் நெருக்கமான உறவாக ஸ்மார்ட்போன்களை தான் நேசிக்கிறார்கள்’ என்று அந்த ஆய்வு சொல்கிறது. இப்படியொரு வேதனையான சாதனை பட்டியலில், உலக அளவில் முதல் இடத்தை தனதாக்கி இருப்பது இந்தியா என்பது கூடுதல் அதிர்ச்சி.

உலகம் முழுவதும் இப்படி ஸ்மார்ட்போன்களில் மூழ்கி கிடப்பவர்கள் 33 சதவீதம் பேர் இருக்கிறார்களாம். நம் தேசத்திலோ 47 சதவீதம் பேர் தங்களுக்கு பிடித்தமானவர்களை விட ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் காதல் செய்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக் கிறது. வீட்டில் இருக்கும்போதும், பரபரப்பான பணி தளத்திலும், நடக்கும்போதும், பயணத்தின்போதும் கூட ஸ்மார்ட்போன்களை தொடாமல் அவர்களால் இருக்க முடிவதில்லை. இன்னும் பலர் தூங்கும்போது தங்கள் மார்பிலோ, உடலுக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு கீழோ செல்போன்களை வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள். அவ்வப்போது எழும்பி செல்போனில் ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா? யாராவது மெசெஜ் அனுப்பி இருக்கிறார்களா? என்பதையும் பார்த்து தூக்கத்தை தொலைக்கிறார்கள். இது மனநோய்க்கு வித்திடும் என்ற எச்சரிக்கையையும் வேறு சில ஆய்வுகள் தருகின்றன. இவ்வாறு, ஸ்மார்ட்போன்களை பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும், தங்களின் இணையரையும், நண்பர்களையும் விட மேலாக கருதும் சமூகமாக இந்திய தேசம் உருமாறி வருவது நிச்சயம் வேதனைக்குரியதுதான்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், நம்மை நேசிக்கும் பெற்றோரும், உற்றாரும் நமக்கு எது தேவையோ, எது நல்லதோ அதை மட்டுமே தருவார்கள். ஆனால், நாம் நேசிக்கும் ஸ்மார்ட்போன்களோ என்னக் கேட்டாலும் தரும். தேவையற்றதையும், தீமைகளையும் கூட அள்ளிக்கொடுக்க எப்போதும் தயாராக இருக்கின்றன. எனவே, யதார்த்தம் அறிந்து தொட்டுக்கொள்ளும் ஊறுகாவை போல தேவைக்கு மட்டும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் தீங்குகள் நம்மை நாடாமல் தப்பிக்கலாம்.

-தமிழ்நாடன்

Next Story