கொடுமுடி அருகே பரிதாபம் கார் மீது லாரி மோதல்; 2 பேர் பலி


கொடுமுடி அருகே பரிதாபம் கார் மீது லாரி மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 11:45 PM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஊஞ்சலூர்,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 70). இவருடைய மகன் ரமேஷ் (45). இவர் புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மாமியார் தெய்வானை வீடு ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் உள்ளது.

தெய்வானையை பார்ப்பதற்காக ரமேஷ், அவருடைய தந்தை பழனிச்சாமி, ரமேசின் பெரியம்மாவான வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தராம்பாள் ஆகியோர் ஒரு காரில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து கொளத்துப்பாளையத்துக்கு வந்தனர்.

மாமியார் தெய்வானையை பார்த்துவிட்டு மீண்டும் வேலாயுதம்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ரமேஷ் ஓட்டினார். கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் வெள்ளைப்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியின் டயர் திடீரென்று வெடித்து தாறுமாறாக ஓடி ரமேசின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ், சுந்தரம்பாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பழனிச்சாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தராம்பாள் பரிதாபமாக இறந்தார். கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ரமேசை கொண்டு சென்றனர்.

ஆனால் அவரும் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story