கமல்ஹாசன் வம்பில் மாட்டிக்கொள்வார்: அரசியல் ஒன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி அல்ல - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கு


கமல்ஹாசன் வம்பில் மாட்டிக்கொள்வார்: அரசியல் ஒன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி அல்ல - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கு
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 28 Feb 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி அல்ல என்று கமல்ஹாசனை தாக்கி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜவஹர் மைதானத்தில் ஜெயலலிதாவின் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் விநாயக மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் பாஸ்கரன் வர வேற்று பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

கமல்ஹாசன் ஒரு நல்ல குடும்பத்தலைவராக கூட இருக்கவில்லை. அவர் கட்சியில் யாரும் இணையமாட்டார்கள். அமைதியாக வாழும் மக்களை கொந்தளிக்க வேண்டும் என்று கூறி தூண்டி விடுகிறார். இதே நிலை நீடித்தால் அவர் வம்பில் தான் மாட்டிக்கொள்வார்.

அரசியல் ஒன்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லை. பின்னணியில் யாரோ அவருக்கு தவறான யோசனை கூறுகிறார்கள். 45ஆண்டுகளாக தான் பிறந்த ஊரையே பார்க்காதவர் தமிழக மக்களை எவ்வாறு கவனிப்பார். கமல் மீது நடிகை கவுதமி குற்றம்சாட்டியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. அந்த பிரச்சினையை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியவரால் தமிழக மக்கள் பிரச்சினைகளை எப்படி சமாளிக்க முடியும். இவரைப்பார்த்து ரஜினிகாந்த் கட்சி தொடங்காமல் இருப்பதே நல்லது.

ஜெயலலிதா இறப்பார் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை. அவரது படம் சட்டசபையில் ஸ்டாலின் இருக்கைக்கு நேராக திறக்கப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி கிடையாது. தி.மு.க. தொடுத்த வழக்கில் அவர் சிறு கவனக்குறைவாக இருந்து விட்டதால் குற்றம் சாட்டப்பட்டார்.

வெள்ளையர்கள் ஆட்சியில் காந்தி, சுபாஸ் சந்திரபோசை குற்றவாளிகள் என்று அறிவித்தனர். ஆனால் அவர் கள் இந்திய மக்களின் மாபெரும் தலைவர்கள். அதே போல ஜெயலலிதா தி.மு.க. ஆட்சிக்கு மட்டுமே குற்றவாளி ஆனால் மக்களுக்கு தியாகி. இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரூ.2லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

Next Story