நெல்லையில் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை: பிரபல கொள்ளையன் கைது; 103 பவுன் நகை மீட்பு


நெல்லையில் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை: பிரபல கொள்ளையன் கைது; 103 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 1 March 2018 2:00 AM IST (Updated: 1 March 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வங்கி அதிகாரி வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 பவுன் நகை மீட்கப்பட்டது.

நெல்லை,

நெல்லையில் வங்கி அதிகாரி வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 பவுன் நகை மீட்கப்பட்டது.

தனிப்படை


நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் தொடர் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வரதராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நாகர்கோவில் பஸ் நிலையம் பகுதியில் நின்ற ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த செல்வமணி மகன் ரீசீஸ் (வயது 26) என்பது தெரியவந்தது.

தப்பி ஓட்டம்

அவர் பல இடங்களில் கொள்ளையடித்து தெரியவந்தது. ரீசீஸ் வைத்து இருந்த பையில் தங்க நகைகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி, ரீசிசை நாகர்கோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து நாகர்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த ரீசிசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கி அதிகாரி வீட்டில்...


இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் நாகர்கோவில் சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் ரீசீஸ் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ராஜராஜேசுவரி நகரில் வங்கி அதிகாரி சிவசாமி வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரபல கொள்ளையன் ரிசீசை போலீஸ் காவலில் எடுத்து நேற்று விசாரணை நடத்தினர்.

103 பவுன் நகை மீட்பு

விசாரணையில் அவர் வங்கி அதிகாரி சிவசாமி வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 103 பவுன் நகைகளையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர். அவரை மீண்டும் கைது செய்து, நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் ரீசீஸ் நெல்லை சந்திப்பு பாலபாக்கிய நகரை சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 2 வைர வளையல்களை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

Next Story