கோட்டப்பாடி, பாக்கனா பகுதிகளில் காட்டு யானைகள் வருவதை அறியும் வகையில் ஒலி எழுப்பும் கருவிகள்


கோட்டப்பாடி, பாக்கனா பகுதிகளில் காட்டு யானைகள் வருவதை அறியும் வகையில் ஒலி எழுப்பும் கருவிகள்
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 1 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கோட்டப்பாடி, பாக் கனா பகுதிகளில் காட்டுயானைகள் வருவதை அறியும் வகையில் ஒலி எழுப்பும் கருவிகளை 2 இடங்களில் வனத்துறையினர் பொருத்தி வைத்துள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி அருகே கோட்டப்பாடி, தட்டாம்பாறை, முருக்கம்பாடி, மழவன்சேரம்பாடி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் காட்டு யானைகள் இரவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அடிக்கடி அச்சுறுத்துகின்றன.

சில நேரங்களில் சாலையோரம் உள்ள புதர்களுக்குள் மறைந்து நின்று வாகனங்களை துரத்துவது, பொதுமக்களை விரட்டி தாக்குவது போன்ற சம்பவங்களும் அதிகளவு நடைபெற்று வருகின்றன. காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கோட்டப்பாடி, பாக்கனா பகுதிகளில் காட்டு யானைகள் வந்தால் முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் சத்தம் எழுப்பும் கருவிகளை (அலாரம்) 2 இடங்களில் வனத்துறையினர் பொருத்தி உள்ளனர். கூடலூர் கோட்ட வன அலுவலர் திலிப், வனச்சரகர்கள் மனோகரன், கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அந்த கருவி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சாலையோரம் பொருத்தப்பட்டு உள்ள இந்த கருவி ஒலி எழுப்பினால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து இருப்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். இது பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். காட்டு யானைகளிடம் பொதுமக்கள் சிக்காமல் இருக்க இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதில் முதல் கட்டமாக கோட்டப்பாடி, பாக்கனா பகுதியில் அலாரம் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. விரைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story