கோடை காலம் தொடங்கிய நிலையில் குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்


கோடை காலம் தொடங்கிய நிலையில் குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 March 2018 3:45 AM IST (Updated: 1 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கோவை குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை,

கோவை மாநகராட்சி பகுதியில் உக்கடம் பெரிய குளம், சிங்காநல்லூர் குளம், வாலாங்குளம் உள்பட 8 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் தான் கோவை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக உள்ளன. இதில் குறிச்சி உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் குளத்துக்கு தண்ணீர் வரத்து தடைபடுகிறது.

இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் கூட இந்த குளத்துக்கு தண்ணீர் வராத நிலை உள்ளது. மேலும் மழைநீரும் ஆறுகள் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. இந்த நிலையில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சாமிநாதன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:-

கோவை மாநகரில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைபெய்தும், தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கால்வாய்களை தூர்வார முடிவு செய்து உள்ளோம். இதில் 365 ஏக்கர் பரப்பளவு கொண்ட குறிச்சி குளத்துக்கு நொய்யல் ஆற்றில் உள்ள புட்டுவிக்கி தடுப்பணையில் இருந்து தண்ணீர் வருகிறது. சுமார் 3.6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கால்வாய் தூர்வாரப்படாததால், இருபுறமும் புதர்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

மேலும் தடுப்பணையில் உள்ள மதகுகளை சுற்றிலும் செடிகள் வளர்ந்து காணப்பட்டன. எனவே வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ள பருவமழையை கருத்தில் கொண்டு தற்போதே இந்த கால்வாயை தூர்வாரி தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் கால்வாயை தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த கால்வாயை தூர்வாரும் பணி நிறைவு பெற்றதும், தடுப்பணையில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணியை தொடங்க உள்ளோம். குறிச்சி குளம் முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளை கடந்து விட்டது. எனவே இந்த ஆண்டு பருவமழை காலத்தில் குளம் நிரம்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த குளம் நிரம்பினால் சுமார் 20 கி.மீட்டர் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இது விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படும். இதுதவிர குறிச்சி குளம் ஏற்கனவே தூர்வாரப்பட்டு உள்ளது. குளத்தின் கரைகளில் மண்கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆண்டு பருவமழை காலத்தில் இந்த குளம் நிறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story