திருச்சிகடி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டம்


திருச்சிகடி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 3:45 AM IST (Updated: 1 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிகடி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், குரும்பர் ஆகிய ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். ஆதிவாசி மக்கள் பழமை மாறாமல் தங்களது பாரம்பரியம், கலாசாரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை தற்போதும் கடைபிடிக்கிறார்கள். இதில் கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வணங்கி வருகின்றனர். அவர்கள் அய்யனோர், அம்மனோர் பண்டிகையை தங்களது பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். இதனை கம்பட்ராயர் திருவிழா என்று அழைக்கின்றனர்.

கோத்தர் இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கோத்தகிரி அருகே உள்ள திருச்சிகடி கிராமத்தில் கடந்த 19-ந் தேதி கோத்தர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் பண்டிகை கொண்டாடப்பட வில்லை.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. பண்டிகையை முன்னிட்டு அய்யனோர், அம்மனோர் கோவில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. அமாவாசை முடிந்து வளர்பிறை தொடங்கும் திங்கட்கிழமை அன்று பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இந்த பண்டிகையின் 9-வது நாளான நேற்று கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர். இதில் முதலில் ஆண்களும், அடுத்து பெண்களும் பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து நடனம் ஆடி வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து கோத்தர் இன மக்கள் பல்வேறு வண்ண ஆடைகள் அணிந்து வந்தனர். அப்போது 5 பேர் தலைப்பாகை அணிந்து ராஜ உடையுடன் பாரம்பரிய நடனம் ஆடினார்கள்.

இதில் தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம், ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கோத்தர் இன மக்களும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கோத்தர் இன மக்களின் இளைஞர் சங்க செயலாளர் புஷ்பகுமார் கூறியதாவது:-

கோத்தர் இன மக்களின் முக்கிய பண்டிகையாக கம்பட்ராயர் திருவிழா விளங்குகிறது. பண்டிகையை முன்னிட்டு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் விறகுகள் எடுத்து வரப்பட்டு, கிராமத்தின் நடுவில் இரவில் நெருப்பு மூட்டி பாரம்பரிய நடனம் ஆடுவோம். இதற்கு தோடர் இன மொழியில் இல்மார்மாட் (இரவு ஆட்டம்) என்று அழைக்கப்படுகிறது. அக்விருத நாளில் கோத்தர் இன மக்கள் எல்லாரும் நலமாக இருப்பதற்காக பூசாரி வேண்டுதல் செய்வார். அதில் கோத்தர் இன மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்வார்கள்.

கோவிலின் பின்புறத்தில் 90 கிலோ எடை உள்ள கற்களை பூசாரி உள்பட பெரியவர்கள் 4 பேர் தூக்குவார்கள். அதனை எந்த அளவுக்கு தூக்குவார்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் நன்றாக இருப்போம் என்பது நம்பிக்கை. இன்று (நேற்று) தொட்ராட் (பெரிய ஆட்டம்) நடைபெற்று உள்ளது. இன்று (வியாழக்கிழமை) குட்ராட் (சின்ன ஆட்டம்) நடைபெறுகிறது. ஏற்கனவே கோக்கால், கொல்லிமலை, புது கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, குந்தா கோத்தகிரி உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரிய பண்டிகை கொண்டாடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story