ரேஷன் கார்டுகளை மாற்றும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை


ரேஷன் கார்டுகளை மாற்றும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 March 2018 4:45 AM IST (Updated: 1 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன்கார்டுகளை மாற்றம் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி,

புதுவையில் வசதிபடைத்தவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்தார். எனவே இலவச பொருட்கள் பெருவோர் பட்டியலில் இருந்து வசதி படைத்தவர்களை நீக்கும் விதமாக ஆயிரக்கணக்கான சிவப்பு கார்டுகளை மஞ்சள் கார்டுகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சந்தேகத்துக்குரியவர்களின் கார்டு விவரங்களை ஒவ்வொரு ரேஷன்கடைகளிலும் வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு ஆட்சேபனையிருப்பின் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்து, சுகுமாரன், கோபிகா ஆகியோர் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர்.

அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏ.க்களை போலீசார் உள்ளே அனுமதித்த னர். ஆனால் அவர்களது ஆதரவாளர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசாருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரையும் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

அதன்பின் எம்.எல்.ஏ.க்கள் குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் பிரியதர்ஷிணியை சந்தித்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவப்பு நிற ரேஷன்கார்டுகளை ஏன் மஞ்சள் கார்டுகளாக மாற்றுகிறீர்கள்? என்று மக்களுக்கு விளக்கம் கொடுங்கள் என்றும், நெல்லித்தோப்பு, ஏம்பலம், ஏனாம் தொகுதியில் முதலில் கார்டுகளை மாற்றுங்கள் என்றும் ஆட்சி அமைந்தபின் எத்தனை முறை இலவச அரிசி போட்டுள்ளர்கள்? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இயக்குனர் திணறினார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் கையெழுத்திட்டு மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலம் 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று புதுவையில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை மஞ்சள் நிற கார்டுகளாக மாற்றம் செய்ய இருப்பதாக முன் அறிவிப்பு பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை புதுச்சேரி மக்களின் பொருளாதாரத்தை முற்றிலும் நலிவடைய செய்வதாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

சிவப்பு நிற கார்டுகளை மாற்றம் செய்வதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதன்மூலம் மிக அதிகமாக முறைகேடுகள் நடக்கும். இதனால் தலித், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் அனைவரது வாழ்வாதாரமும் வஞ்சிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்புள்ளது.

மேலும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேற்படி வகையில் திசை திருப்புகின்ற ஒரு நாடகமாக நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே இந்த தடாலடி திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த செயல் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவில்லையென்றால் எங்களது தலைவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்படி அனைத்து ரேஷன்கடைகள் முன்பாக போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story