எடை குறைவாக பொருட்கள் அனுப்புவதாக கூறி ரேஷன் கடை பணியாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்


எடை குறைவாக பொருட்கள் அனுப்புவதாக கூறி ரேஷன் கடை பணியாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 4:15 AM IST (Updated: 1 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

எடை குறைவாக பொருட்கள் அனுப்புவதாக கூறி ரேஷன் கடை பணியாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் 371 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுகிறது. இந்த பொருட்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட எடை குறைவாக இருப்பதாக கூறி, ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாவட்ட தலைவர் காளியப்பன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் கனகசபாபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக பொருட்கள் அனுப்புவது வாடிக்கையாக உள்ளது.

இது குறித்து ஏற்கனவே மனு கொடுத்ததோடு, நேரிலும் தெரிவித்தோம். நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து ஜனவரி மாதத்தில் முதல் 2 வாரங்களில் தினமும் 2 அல்லது 3 லோடுகள் வீதம் அனுப்பப்பட்டன. அடுத்த வாரத்தில் 18 முதல் 23 லோடுகள் வரை அனுப்பப்பட்டன.

ஒரு மூட்டைக்கு 3 கிலோ வரை எடை குறைவாக இருக்கிறது. மேலும் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை எந்திரத்தில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இது பற்றி ரேஷன் கடை பணியாளர்கள் கூறும் போது பொதுமக்கள் வாக்குவாதம் ஏற்படுகிறது. ரேஷன் கடைகளுக்கு எடை குறையாமல் பொருட்கள் அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story