சாவடிப்பாளையம் ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்


சாவடிப்பாளையம் ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

சாவடிப்பாளையம் ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அடுத்துள்ள நஞ்சை ஊத்துக்குளியில் ஒரு தனியார் தீவன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தீவனங்கள் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் தீவனம் தயாரிக்க தேவையான மக்காச்சோளம், சோயா போன்றவை பல்வேறு ஊர்களில் கொள்முதல் செய்யப்பட்டு, ரெயிலில் ஈரோடு கொண்டுவரப்படும். அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் இறக்கப்பட்டு, லாரிகள் மூலம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தீவன தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.

காலவிரயம், பொருட் செலவுகளை சரிக்கட்ட தொழிற்சாலை சார்பில் சாவடிப்பாளையம் ரெயில் நிலையத்தில் தனிப்பாதை போடப்பட்டு, புதிய செட் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தீவன தொழிற்சாலைக்காக 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் சுமார் 2,600 டன் எடையுள்ள சோயா மூட்டைகள் நேற்று மதியம் சாவடிப்பாளையம்புதூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

தொழிற்சாலையில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து சோயா மூட்டைகளை இறக்க ரெயில் நிலையம் வந்தனர். இதுகுறித்த தகவலறிந்து, ஈரோடு சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாவடிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தார்கள். பின்னர் வெளிமாநில தொழிலாளர்களை மூட்டைகளை இறக்க அனுமதிக்க மாட்டோம். நாங்கள்தான் இறக்குவோம் என்று தொழிற்சாலைக்கு செல்லவேண்டிய லாரிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே போலீசார், மொடக்குறிச்சி தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யு. சுமைதூக்குவோர் சங்க தலைவர் டி.தங்கவேல் தலைமையில் தொழிலாளர்கள், ‘மூட்டைகளை நாங்கள்தான் இறக்குவோம். கூலி குறித்து நாங்கள் எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. நிர்வாகம் சொல்லும் நேரத்திற்கு வந்து இறக்கவும் தயாராக உள்ளோம். ஆனால் வெளிமாநில தொழிலாளர்களை வைத்து மூட்டைகளை இறக்க அனுமதிக்க மாட்டோம்‘ என்றார்கள்.

அப்போது தொழிற்சாலையின் இயக்குனர், ‘நாங்கள் மூட்டைகளை இறக்க உரிய அனுமதி பெற்றிருக்கிறோம். நாங்கள் உங்களை அழைக்கவில்லை‘ என்று கூறினார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. உடனே சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து சோயா மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்ற விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மதியம் முதல் இரவு வரை போராட்டம் தொடர்ந்தது.

மேலும் திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட சுமைதூக்கும் சங்கத்தினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாவடிப்பாளையம் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாவடிப்பாளையம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story