திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழா: ‘நம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழா: ‘நம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்’
x
தினத்தந்தி 1 March 2018 2:30 AM IST (Updated: 1 March 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழாவில் சத்தீஷ்கர் மாநில மத்திய ரிசர்வ் போலீஸ் டி.ஐ.ஜி. இளங்கோ கூறினார்.

திருச்செந்தூர்,

நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாள் விழாவில் சத்தீஷ்கர் மாநில மத்திய ரிசர்வ் போலீஸ் டி.ஐ.ஜி. இளங்கோ கூறினார்.

கல்லூரி நாள் விழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 53-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் ஆண்டறிக்கை வாசித்தார்.

கல்லூரியின் முன்னாள் மாணவரும், சத்தீஷ்கர் மாநில மத்திய ரிசர்வ் போலீஸ் டி.ஐ.ஜி.யுமான இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முழு வெற்றியை அடைய

நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், இந்த கல்லூரியை தொடங்கிய ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாருக்கும், இதனை சிறப்பாக வழிநடத்திய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற பலர் இந்த கல்லூரியில் படித்து மிக உயரிய பதவிகளை வகித்து பெருமை சேர்த்து வருகின்றனர்.

மாணவர்கள் தங்களது திறமைகளை உணர்ந்து, அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். நமக்கு பிடித்த துறையில் ஊக்கமாக பணியாற்றினால் முழு வெற்றியை அடையலாம். மாணவர்கள் எந்த நிலையிலும் தைரியத்தை இழக்க கூடாது. மாணவர்கள் சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சியை தவறாமல் செய்து வர வேண்டும்.

நம்பிக்கை- முயற்சி

தற்போதைய கணினி யுகத்தில் பல துறைகளில் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவர்கள் சில துறைகளிலேயே நுழைவதால், வேலைவாய்ப்புகள் குறைந்ததாக தோன்றுகிறது. நமது பலத்தையும், பலவீனத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்வில் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும். வாய்ப்புகளை தவற விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை நாமே உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும். நமது வேலையில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தைரியமாக செயல்படுகிறவர்களுக்குதான் அதிர்ஷ்டமும் துணை நிற்கும். எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் ஒருபோதும் நம்பிக்கையையும், முயற்சியையும் கைவிடக் கூடாது. நம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்டு மலர் வெளியீடு

பின்னர் கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆண்டு மலரை வெளியிட்டார். அதனை சத்தீஸ்கர் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை தலைவர் இளங்கோ பெற்று கொண்டார். பின்னர் அவர், பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த மாணவர்களுக்கும், பொதுஅறிவு போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான பொது அறிவு போட்டியில் முதலிடம் பிடித்த திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரிக்கு காமராஜர் நினைவு சுழற்கோப்பை பரிசு வழங்கப்பட்டது. திருச்செந்தூர் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையிலான பொது அறிவு போட்டியில் முதலிடம் பிடித்த திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் பள்ளிக்கு தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் நினைவு சுழற்கோப்பை பரிசு வழங்கப்பட்டது. பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் மா.பா.குருசாமி, ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், முதல்வர்கள் ஜெயந்தி (கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி), ஒய்ஸ்லின் ஜிஜி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி), டென்சிங் சுவாமிதாஸ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி), மரியசெசிலி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), கலைக்குரு செல்வி (பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி), பெவின்சன் பேரின்பராஜ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி), சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை தலைவர் ஜெயபாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story