தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்தின் கீழ் சமூக விரோத செயல்கள் நடைபெறும் அவலம், பொதுமக்கள் அச்சம்


தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்தின் கீழ் சமூக விரோத செயல்கள் நடைபெறும் அவலம், பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 1 March 2018 3:15 AM IST (Updated: 1 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்தின் கீழ் குப்பைகள் மற்றும் புதர் மண்டி கிடப்பதால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் அவல நிலை உள்ளது. இதனால் ரெயில் நிலையத்துக்கு நடந்து செல்ல அச்சமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தை கடந்து செல்லும் ரெயில்வே மேம்பாலத்தில் ஒரு பகுதி கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவிற்கும், மற்றொரு பகுதி சிட்லபாக்கத்திற்கும் செல்கிறது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டபோது மேம்பாலத்தின் கீழ் கிழக்கு தாம்பரம் செல்லும் சர்வீஸ் சாலை மற்றும் சிட்லபாக்கம் செல்லும் சர்வீஸ் சாலை பகுதியில் மேம்பாலம் கீழ் பகுதியில் இரும்பு கிரில் தடுப்புகள் வைக்கப்பட்டு பல இடங்களில் செடிகள் வைக்கப்பட்டிருந்தது.

இங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில்கள், தரமாக வைக்கப்படவில்லை. இதனால் சில ஆண்டுகளிலேயே, சுவரோடு பெயர்ந்து கீழே விழுந்தது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள இரும்பு கிரில்கள் பெரும்பாலும் மர்ம நபர்களால் திருடப்பட்டுவிட்டது.

தற்போது இருக்கும் கொஞ்சம் இரும்பு கிரில்களும் இன்னும் சில மாதங்களில் இல்லை என்ற நிலை உருவாகும் வகையில் உள்ளது. தற்போது, இந்த பாலத்தின் கீழ் குப்பைகள் கொட்டப்பட்டு புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

தாம்பரம் சானடோரியம் மேம்பாலம் திறக்கப்பட்டபோது, இந்த பகுதியில் கிரில்கள் அமைக்கப்பட்டு பச்சைபசேல் என செடிகளும் வைக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது, இரும்பு கிரில்கள் திருடப்பட்டுள்ளது.

பாலத்தின் கீழ் பகுதி முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டு புதர் மண்டி இருப்பதால், இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது. இந்த கிரில்களை மீண்டும் அமைத்து பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் புதர்களையும் அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில் நிலையத்தின் அருகே இருப்பதால் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி அரசுக்கு வருவாய் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story