காஞ்சீபுரம் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை


காஞ்சீபுரம் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 1 March 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.61 கோடியே 72 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 6,858 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.61 கோடியே 72 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 76 பேருக்கு ரூ.68 லட்சத்து 40 ஆயிரமும், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 351 பேருக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

557 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.5 கோடியே 1 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளை ஊக்குவிக்க தமிழக அரசால் கடந்த 5 ஆண்டுகளில் கல்வி உதவித்தொகையாக 2 ஆயிரத்து 672 மாணவ-மாணவிகளுக்கு ரூ.96 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்தொகையாக மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்ட நல்ல நிலையில் உள்ள 90 பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.46 லட்சம் திருமண உதவித்தொகையும், 330 கிராம் தங்க நாணயங்களும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 9,012 பேருக்கு பஸ் பயணச்சலுகை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10 கோடியே 30 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களும், 68 ஆயிரத்து 621 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரு கால்கள் பாதிக்கப்பட்டு இரு கைகள் நல்ல நிலையில் உள்ள 105 பேருக்கு ரூ.59 லட்சத்து 85 ஆயிரம் வீதம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story