மாநகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


மாநகராட்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 4:15 AM IST (Updated: 1 March 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றில் குப்பைகளை கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து, மாநகராட்சி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து 6 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி,

காட்பாடி காங்கேயநல்லூர் பாலாற்றுப் பகுதியில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரியில் கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகாரும், இப்பகுதியில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். ஆனால், காங்கேயநல்லூர் பாலாற்றுப் பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காங்கேயநல்லூர் பாலாற்றுப் பகுதிக்குக் குப்பைகளை கொட்ட, மாநகராட்சி லாரி ஒன்று வந்தது. அதனை, பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் பொதுமக்கள் லாரியின் முன்பாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சியை கண்டித்தும் கோஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலர் மற்றும் பொறியாளர் சம்பவ இடத்துக்குச் சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பாலாற்றில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என அதிகாரிகள் எழுதி கொடுத்தால் தான், லாரியை விடுவிப்போம் எனக் கூறினர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பாலாற்றில் குப்பைகளைக் கொட்ட மாட்டோம் என்றும், மேலும் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை ஒரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் எழுதி கொடுத்தனர்.

இதையடுத்து சிறைபிடித்த லாரியை பொதுமக்கள் விடுவித்தனர். காலை 10.30 மணியளவில் தொடங்கிய சிறை பிடிப்பு போராட்டம் மாலை 4.30 மணி வரை 6 மணி நேரம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story