கர்நாடகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு மந்திரி ரமேஷ்குமார் தகவல்


கர்நாடகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு மந்திரி ரமேஷ்குமார் தகவல்
x
தினத்தந்தி 1 March 2018 3:35 AM IST (Updated: 1 March 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மந்திரி ரமேஷ்குமார் தெரிவித்தார்.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக கர்நாடகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மந்திரி ரமேஷ்குமார் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனையை விட....

கோலார் எஸ்.என்.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் ரத்த வங்கி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுகாதார துறை மந்திரியுமான ரமேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோலார் எஸ்.என்.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் தனியார் மருத்துவமனையை விட தரம் வாய்ந்த சிறப்பாக கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி அதிநவீன முறையில் மாற்றப்பட்டுள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை-எளிய மக்கள் பயனடைவார்கள். மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த தாலுகா ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே டயாலிசிஸ் மையம் சிறப்பாக நடந்து வருகிறது.

கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு


கர்நாடகம் முழுவதும் 900 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக, ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நிரப்பப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள், தனியார் மையங்களில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் எடுத்தால் ரூ.8 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக அவர்கள் ஸ்கேன் எடுக்கலாம்.

கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதன்காரணமாக கர்நாடகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளேன். கூடிய விரைவில் அனைத்து ஆஸ்பத்திரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story