இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 25,802 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 25,802 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 25,802 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

திருப்பூர்,

தமிழகஅரசின் தேர்வுத்துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 198 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 11 ஆயிரத்து 212 மாணவர்களும், 13 ஆயிரத்து 607 மாணவிகளும், 983 தனிதேர்வர்களும் என்று மொத்தம் 25 ஆயிரத்து 802 பேர் எழுதுகிறார்கள்.

இவர்கள் தேர்வு எழுத 77 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 77 தலைமையாசிரியர்களும், துறைஅலுவலர், கூடுதல் துறைஅலுவலர்களாக 87 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,504 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றை கண்காணிப்பதற்கு கலெக்டர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் எந்த நேரத்திலும் தேர்வு மையங்களை திடீரென பார்வையிட்டு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

தேர்வுகளை பார்வையிடும் அதிகாரிகள், பறக்கும் படையினர் தங்கள் குறிப்புகளை, ஆலோசனைகளை பதிவுசெய்ய பதிவேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதே போல மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏற்றவாறு வகுப்பறைகளில் இருந்த இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு மாணவர்களின் பதிவு எண்கள் இருக்கையில் எழுதப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Next Story