தினகரன் அணியினர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி சென்றதால் பரபரப்பு


தினகரன் அணியினர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2018 3:00 AM IST (Updated: 1 March 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டனின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டிக்கொண்டு நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மணிகண்டன் அ.தி.மு.க.வின் கரை வேட்டியை தினகரன் அணியினர் கட்டக்கூடாது என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட தினகரன் அணியினர் சார்பில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் தலைமையில் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நடந்து அமைச்சரின் வீடு வழியாக சென்று அரண்மனை பகுதிக்கு செல்ல திட்டமிட்டு புறப்பட்டனர். ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் முத்தீஸ்வரன், மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் நகர் செயலாளர் ரஞ்சித்,திருப்புல்லாணி களஞ்சியம் என்ற ஜெயச்சந்திரன், மணடபம் முரளிராஜா, நகர் செயலாளர் களஞ்சியராஜா உள்பட நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டபடி அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி சென்றனர்.

அவர்களை அண்ணா சிலை அருகில் வழிமறித்த துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினர். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் முடிவில் அனைவரும் காரில் அரண்மனை சென்று அங்கிருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சர் மணிகண்டனின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். அப்போது மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வது.நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதன்பின்னர் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் கூறியதாவது:- ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் தினகரன் தலைமையிலான எங்களை அ.தி.மு.க.வின் கரை வேட்டியை கட்டக்கூடாது என்று பேசியுள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் அ.தி.மு.க. கரை வேட்டி அணிந்து அவரின் வீடு அருகில் இருந்து சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்துள்ளோம். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 2 நாட்கள் கழித்து தினந்தோறும் கரைவேட்டியுடன் நடந்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

மேலும், கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் ராமநாதபுரத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் அ.தி.மு.க. கரை வேட்டி அணிந்து அமைச்சரின் இல்லம் வழியாக செல்வதாக கூறப்பட்டதை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தெரு முழுவதும் நான்கு புறமும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து தினகரன் அணியினர் திரண்டு அ.தி.மு.க. கரை வேட்டியுடன் நடந்து சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் வ.து.ந. ஆனந்த் உள்ளிட்டோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story