ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு 452 காளைகள் சீறிப்பாய்ந்தன


ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு 452 காளைகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே மங்களாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 452 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 11 பேர் காயமடைந்தனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். பின்னர் அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட காளைகளை, கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து 452 காளைகளுக்கு அனுமதி வழங்கினர். மாடுபிடி வீரர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து 102 பேரை களத்தில் இறங்க அனுமதித்தனர். அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் வாடிவாசலில் இருந்து புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி எரிந்து விட்டு துள்ளிக்குதித்து சென்றன. இதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கிரைண்டர், கட்டில், சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தலிப், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கிய சேவியர் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் ஆலங்குடி, வடகாடு, கறம்பக்குடி, செம்பட்டு விடுதி போலீசார் செய்திருந்தனர்.

Next Story