பிளஸ்–2 பொதுத்தேர்வை 21,424 மாணவ, மாணவிகள் எழுதினர் கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு


பிளஸ்–2 பொதுத்தேர்வை 21,424 மாணவ, மாணவிகள் எழுதினர் கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 2 March 2018 4:30 AM IST (Updated: 2 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 424 மாணவ, மாணவிகள் எழுதினர். நல்லம்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி,


தமிழகம் முழுவதும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் 64 மையங்களில் நேற்று பிளஸ்–2 தேர்வுகள் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் 154 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 10,356 மாணவர்கள், 10,816 மாணவிகள், மற்றும் 829 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 22,001 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 21,424 மாணவ–மாணவிகள் நேற்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினார்கள். தமிழ் முதல்தாள் தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் 184 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை.

இத்தேர்விற்காக 64 முதன்மை கண்காணிப்பாளர்களும், 64 துறை அலுவலர்களும், 24 வழித்தட அலுவலர்களும், 135 பறக்கும் படை அலுவலர்களும், 1100 அறைக்கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு தேர்வு பணியில் ஈடுபட்டனர்.


மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளின் வசதிக்காக அவர்கள் சொல்வதை எழுத 19 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் தேவையான அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,456 அலுவலர்கள் பிளஸ்–2 தேர்வு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தேர்விற்காக 10 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வழித்தட அலுவலர்கள் மூலம் வினாத்தாள் கட்டுகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

இந்த நிலையில் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:–


தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட பறக்கும் படை குழுவும், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் கல்வித் துறை மூலம் பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story