நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 17,935 மாணவ, மாணவிகள் எழுதினர்


நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 17,935 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2018 4:30 AM IST (Updated: 2 March 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 17,935 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 61 மையங்களில் நடைபெற்றது. இதில் நாகை வெளிப்பாளை யத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் சுரேஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (நேற்று) தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 789 மாணவர்கள், 10 ஆயிரத்து 382 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 171 பேரில் 17 ஆயிரத்து 935 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். 236 பேர் தேர்வு எழுதவில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்பார்வையற்ற 4 பேருக்கு, சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 மாற்றுத்திறனாளிக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுப் பணியில் தலைமையாசிரியர்கள் 80 பேரும், ஆசிரியர்கள் ஆயிரத்து 82 பேரும், அலுவலகப் பணியாளர்கள் 280 பேரும், காவல்துறை அலுவலர்கள் 156 பேரும் என மொத்தம் 1,598 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வை கண்காணிப்பதற்காக மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் தலைமையில் 64 நிலையான பறக்கும் படைகளும், 18 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் ராகவன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Next Story