திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாள் விழா: “தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்”


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாள் விழா: “தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்”
x
தினத்தந்தி 2 March 2018 2:45 AM IST (Updated: 2 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

“தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்“ என்று திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாள் விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுருளியாண்டி பேசினார்.

திருச்செந்தூர்,

“தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்“ என்று திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாள் விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுருளியாண்டி பேசினார்.

கல்லூரி நாள் விழா

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 31-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுருளியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தன்னம்பிக்கை

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியானது ஆண்டுதோறும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. ஒரு கல்லூரி எப்படி செயல்பட வேண்டும் என்கிற தரத்தையும் தாண்டி, சிறப்பான பேராசிரியர்களால், இங்கு பயிலும் அனைவரும் சாதனை மாணவிகளாக உருவாக்கப்படுகிறார்கள். நாம் எதுவாக நினைக்கிறமோ, அதுவாகவே மாறி விடுகிறோம். எனவே, நாம் எப்போதும் நல்ல மனப்பான்மையோடும், நேர்மறை சிந்தனைகளோடும் வாழ வேண்டும். நமது எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

நாம் தன்னம்பிக்கையுடன் இருக்கின்ற நாளில்தான் அழகாக தெரிவோம். நாம் கோடி ரூபாய்க்கு புதிய ஆடையை உடுத்தினாலும், நம்மிடம் தன்னம்பிக்கை இல்லையென்றால், நம் மீதே நமக்கு கோபம் வரும். எனவே, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

மாணவ- மாணவிகள் பாடங்களை படிக்கும்போது, மனதை ஒருமுகப்படுத்தி, அமைதியான சூழலில் படிக்க வேண்டும். அப்போதுதான் தேர்வறையில் பதற்றமின்றி, பாடங்களை மறக்காமல் நினைவில் கொண்டு சிறப்பாக தேர்வு எழுத முடியும். முயற்சி செய்கின்றவர்களுக்குதான் கடவுளாலும் உதவ முடியும். எந்த முயற்சியுமே செய்யாமல், கடவுளின் உதவியை எதிர்பார்த்து வேண்டுவது வீணானது.

மாணவர்கள் தங்களைத் தாங்களே நம்ப வேண்டும். நாம் பெறுகிற மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை. படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. பணம், பதவி, வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, மனது நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்டு மலர் வெளியீடு

பின்னர் கல்லூரி ஆண்டு மலரை கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டார். அதனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுருளியாண்டி பெற்று கொண்டார். பின்னர் அவர், பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாலதி (இளநிலை கணிதம்), உம்மு சல்மா ரெஹனா (இளநிலை இயற்பியல்), பெரியராஜவதி இலக்கிய ஆஷா (இளநிலை இயற்பியல்), இருதய மேரி அபர்ணா (வணிக நிர்வாகவியல்), சரண்யா (முதுநிலை தமிழ்) ஆகிய 5 மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார்.

மேலும் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளுக்கும், பல்கலைக்கழக அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியைகளுக்கு நினைவு பரிசு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பின்னர் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

விழாவில் கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் மா.பா.குருசாமி, ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், முதல்வர்கள் சுப்பிரமணியம் (ஆதித்தனார் கல்லூரி), ஒய்ஸ்லின் ஜிஜி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி), சுவாமிதாஸ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி), பெவின்சன் பேரின்பராஜ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி), மரிய செசிலி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), கலைக்குரு செல்வி (பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி), சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில், பொருளியல் துறை தலைவர் சண்முகவல்லி நன்றி கூறினார்.

Next Story