ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் சாவு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 2 March 2018 4:30 AM IST (Updated: 2 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களது மகள்கள் மகாலட்சுமி (16), மோனிஷா (15). இவர்களுடன் செல்வத்தின் தாய் வள்ளியம்மாளும் வசித்து வந்தார். செல்வம் இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி இவர்கள் 5 பேரும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளனர்.

இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நேற்று முன்தினம் காலையில் வள்ளியம்மாள் இறந்தார். அதனை தொடர்ந்து ஜெயந்தியும், செல்வமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்து உள்ளது. இப்படி ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் அய்யர்கண்டிகை கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது மோனிஷா போலீஸ் விசாரணையில், தனது அக்காள் மகாலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே தங்கள் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை இல்லாத உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் குடும்பமே தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

மேலும், தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் செல்வத்தின் மகள்கள் மகாலட்சுமி மற்றும் மோனிஷா ஆகிய 2 பேரின் நிலைமையும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story