வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 March 2018 4:00 AM IST (Updated: 2 March 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாசி மக கடல் தீர்த்தவாரி விழா நேற்று புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் கொண்டாடப்பட்டது. இதற்காக விழா குழு சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேடைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

விழாவையொட்டி தீவனூர் பொய்யா மொழி விநாயகர், லட்சுமிநாராயணப் பெருமாள், மயிலம் சிவசுப்ரமணியர், செஞ்சி ரங்கநாதன், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனுவாசப்பெருமாள், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் நேற்று முன்தினம் புதுவை கொண்டு வரப்பட்டனர். இவர்களுக்கு ஆங்காங்கே சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டன.

இதேபோல் புதுவை மணக்குள விநாயகர், காந்தி வீதி வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர், முத்தியால்பேட்டை தென்கலை வரதராஜ பெருமாள், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், சின்னசுப்புராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி, சின்ன கோட்டக்குப்பம் நாகமுத்து மாரியம்மன், கோட்டக்குப்பம் பச்சை வாழியம்மன், வைத்திக்குப்பம் பக்தவச்சல பாண்டுரங்கர் உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவில் புதுவை, திண்டிவனம், கடலூர், விழுப்புரம் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் திருட்டு, ஈவ் டீசிங் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணித்து வந்தனர்.

போலீஸ் டி.ஜி.பி. ராஜிவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அவ்வப்போது பொதுமக்களுக்கு ‘திருடர்கள் ஜாக்கிரதை, பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும்’ என்று அறிவுறுத்தியபடி இருந்தனர்.

வைத்திக்குப்பம் பகுதியில் கடலில் பெரிய அலைகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடையையும் மீறி சிலர் கடலில் இறங்கி குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். விழாவில் கலந்து கொண்ட பலர் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு புதுவையில் நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பல்வேறு தன்னார்வல அமைப்பினர், இலவசமாக நீர்-மோர் வழங்கினர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story