சொகுசு காரில் கடத்தி வந்த 216 கிலோ கஞ்சா பறிமுதல்


சொகுசு காரில் கடத்தி வந்த 216 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 2 March 2018 4:00 AM IST (Updated: 2 March 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து கோவைக்கு சொகுசு காரில் கடத்தி வந்த 216 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த தேனியை சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று வருகிறார்கள். கடந்த 3 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் வெளியூரை சேர்ந்த வியாபாரிகள், தங்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு கும்பல் ஆந்திராவில் இருந்து கோவைக்கு அதிகளவில் கஞ்சாவை கடத்தி வந்து, இங்குள்ள சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனிப்படையை சேர்ந்த போலீசார் கோவை-மருதமலை ரோட்டில் உள்ள சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று காலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு சொகுசு கார் வந்தது. உடனே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காருக்குள் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வந்த காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த காருக்குள் தலா 2 கிலோ எடை கொண்ட 108 கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள், தேனி அருகே உள்ள முத்தலாம்பாறையை சேர்ந்த தர்மர் (வயது 50), அவருடைய தம்பி இருளாண்டி (43), ஆண்டிப்பட்டி குமாரபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (33), ஆண்டிப்பட்டி, பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் (23) என்பதும், இவர்கள் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது. கோவையில் கஞ்சாவை விற்பனை செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கு இந்த கஞ்சாவை கொடுப்பதற்காக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள சிந்தப்பள்ளியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்ததுடன், 216 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் ரொக்கப்பணமும், அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட மேலும் பல வழக்குகள் உள்ளன.

கோவையில் பிடிபட்டவர்கள் கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் கஞ்சா சப்ளை செய்பவர்களிடம் இருந்து இவர்கள் கோவைக்கு கஞ்சா வாங்கி வந்துள்ளனர். இவர்கள் இந்த தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களின் கீழ் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளும் சப்ளை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் யார்? எப்படி அவர்களுக்கு இந்த கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கும்பலை சேர்ந்தவர்கள், முதலில் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக்கி விட்டு, அதே மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய தூண்டி உள்ளனர். இந்த கும்பலின் பிடியில் எத்தனை கல்லூரி மாணவர்கள் உள்ளனர்? இவர்கள் கஞ்சா மட்டும்தான் கடத்துகிறார்களா? அல்லது வேறு போதை பொருட்களை கடத்தி மாணவர்களுக்கு விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் போதைப்பொருள் விற்பவர்கள், கடத்துபவர்கள், பண உதவி செய்பவர்கள், அவர்கள் தங்கி இருக்க இடவசதி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பெரியய்யா எச்சரித்துள்ளார்.

Next Story