மாவட்டத்தில் 3½ லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம்


மாவட்டத்தில் 3½ லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டம்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 3½ லட்சம் மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை கலெக்டர் தண்டபாணி நேற்று தொடங்கி வைத்தார்.

கடலூர்,

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாடுகளுக்கு 14-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் கிராமத்தில் நேற்று காலையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கி, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய நாட்டின் முதுகெலும்பாக கிராமங்கள் இருக்கிறது. கிராமப்புற விவசாயிகளுக்கு உறுதுணையாக கால்நடைகள் இருக்கின்றன. எனவே கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவே தடுப்பூசி போடப்படுகிறது.

இந்திய அரசாங்கம் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தை கடந்த 2012 மார்ச் முதல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இதுவரை 13 சுற்றுகள் போடப்பட்டு, இன்று(அதாவது நேற்று) 14-வது சுற்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இம்முகாம் வருகிற 21-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்த மாவட்டத்தில் 51 கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள 3½ லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் தண்டபாணி கூறினார்.

Next Story